சாலை தடுப்பில் கார் மோதிய விபத்தில் திரைப்பட இசையமைப்பாளர் உள்ளிட்ட 2 பேர் பலி

அவினாசி அருகே சாலை தடுப்பில் கார் மோதிய விபத்தில் திரைப்பட இசையமைப்பாளர் உள்ளிட்ட 2 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

Update: 2023-09-03 20:15 GMT

அவினாசி அருகே சாலை தடுப்பில் கார் மோதிய விபத்தில் திரைப்பட இசையமைப்பாளர் உள்ளிட்ட 2 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

இசையமைப்பாளர்

சென்னையை சேர்ந்தவர் தமிழ் அடியான் (வயது 50). இவர் ஆஸ்திரேலியாவில் இருந்து வருகிறார். இவரும், சென்னையை சேர்ந்த இசையமைப்பாளரான தசி என்கிற சிவக்குமார் (49) இவர் திரைப்படம் மற்றும் டிவி. நிகழ்ச்சிகளுக்கு இசை அமைத்து வந்துள்ளார். திரைப்பட இயக்குனர் மூவேந்தர் (55). மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர் நாகராஜன் (50) ஆகியோரும் நண்பர்கள் ஆவர். இவர்கள் ஆகிய 4 பேரும் சொந்த வேலை காரணமாக ஒரு சொகுசு காரில் சென்னையில் இருந்து கேரளா சென்றனர். பின்னர் அதே காரில் நேற்று கேரளாவில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு சென்று கொண்டிருந்தனர்.

காரை தமிழ் அடியான் ஓட்டி வந்தார். நேற்று மாலை திருப்பூர் மாவட்டம் அவினாசி பை-பாஸ் ரோட்டில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். பச்சாம்பாளையம் பிரிவு அருகே வந்த போது திடீரென்று நிலைதடுமாறி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்புச்சுவர் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது.

2 பேர் பலி

இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. காரில் வந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர் தமிழ் அடியான் மற்றும் தசி என்கிற சிவகுமார் ஆகிய இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

மற்ற இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விபத்து காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்