கார், மோட்டார்சைக்கிள்கள் மீது பஸ் மோதி 8 பேர் காயம்
பல்லடத்தில் கார், மோட்டார்சைக்கிள்கள் மீது தனியார் பஸ் மோதியதில் குழந்தை உள்பட 8 பேர் காயம்
திருப்பூரில் இருந்து கோவை நோக்கி தனியார் பஸ் வந்தது. இந்த பஸ் பல்லடம் பஸ் நிலையம் அருகே வந்த போது முன்னால் சென்ற ஒரு ஸ்கூட்டர், 2 மோட்டார் சைக்கிள்கள், 2 கார்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 4 பேர், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த குழந்தை உள்ளிட்ட 4 பேர் என மொத்தம் 8 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம்- பக்கம் உள்ளவர்கள் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் காயம் அடைந்தவர்களின் பெயர் விவரம் வருமாறு:- அனுசுயா (வயது 63), பாருண் (29), நவீன் (23), ஹென்சா (1), ஷிவா பாத்திமா (7), நவ்ஷத் (30), யமுனா (8) உள்பட 8 பேர் ஆவர். இவர்களில் சிலர் மேல் சிகிச்சைக்காக கோவை மற்றும் திருப்பூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் மேலும் சிலர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் அதிவேகமாக பஸ்சை ஏக்கி விபத்தை ஏற்படுத்தி தலைமறைவான ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.
பொதுவாகவே திருப்பூர்- கோவை செல்லும் தனியார் பஸ்கள் அதிவேகமாகவே இயக்கப்படுவதாகவும், ஓட்டுனர்களின் அலட்சியத்தால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.