கருப்பூர் அருகே அங்கன்வாடி பணியாளர் கார் மோதி பலி-மகன் கண் முன்னே சோகம்

கருப்பூர் அருகே மகனின் கண் முன்னே கார் மோதி அங்கன்வாடி பணியாளர் பலியானார்.

Update: 2023-07-28 21:16 GMT

கருப்பூர்:

அங்கன்வாடி பணியாளர்

சேலம் கருப்பூர் அருகே உள்ள கோட்ட கவுண்டம்பட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கோவிந்தராஜ் (வயது 51), டிரைவர். இவருடைய மனைவி சுகவனேஸ்வரி (வயது 45). இவர் சேலம் பெரமனூரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

இவர்களுக்கு சபரி ஹரிகரன் (20) என்ற மகனும், பவித்ரா (26) என்ற மகளும் உள்ளனர். இவர்களில் பவித்ராவிற்கு திருமணம் ஆகி விட்டது. சபரி ஹரிகரன், சேலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

கார் மோதி பலி

நேற்று காலை கோட்டகவுண்டம்பட்டி அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் இருந்து சேலம் பெரமனூரில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சுகவனேஸ்வரி புறப்பட்டு வந்தார். அவரை மோட்டார் சைக்கிளில் மகன் சபரி ஹரிகரன் கொண்டு வந்து விடுவதற்காக வந்தார்.

டால்மியா போர்டு பகுதியில் தனியார் மருத்துவமனை எதிரில் சென்றபோது ஓமலூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த அங்கன்வாடி பணியாளர் சுகவனேஸ்வரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த விபத்தில் சபரி ஹரிகரன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

சோகம்

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோன்மணி, சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுகவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகனின் கண் முன்னே விபத்தில் தாய் இறந்த சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்