கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை

யானைகள் நடமாட்டம் காரணமாக கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-09 20:00 GMT

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக பேரிஜம் ஏரி விளங்குகிறது. இது, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வனத்துறையினரின் அனுமதி பெற்று, அதற்குரிய கட்டணம் செலுத்தி தான் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல முடியும்.

விழிகளுக்கு விருந்தும், மனதுக்கு புத்துணர்ச்சியும் அளிக்கும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் அங்கு ஏராளமாக உள்ளன. பேரிஜம் ஏரிக்கு செல்லும் வழியில் அமைதிப்பள்ளத்தாக்கு, தொப்பிதூக்கிப்பாறை, மதிகெட்டான் சோலை உள்ளிட்ட சுற்றுலாதலங்களும் உள்ளன. இதனையும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் பேரிஜம் ஏரிப்பகுதியில் கடந்த 2 நாட்களாக 5 காட்டு யானைகள் குட்டியுடன் முகாமிட்டுள்ளன. மேலும் அங்குள்ள மலைப்பாதையிலும் வலம் வருகின்றன. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினா் தடை விதித்துள்ளனர். மேலும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பேரிஜம் ஏரிக்கு செல்ல முடியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்