கிரசர் உரிமையாளர் வீட்டில் ஏ.சி. எந்திரம் வெடித்து தீ விபத்து

கிரசர் உரிமையாளர் வீட்டில் ஏ.சி. எந்திரம் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-06-15 20:24 GMT

கிரசர் உரிமையாளர்

திருச்சி கண்டோன்மெண்ட் ரெனால்ட்ஸ்ரோடு பகுதியில் 4 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் கீழ்தளம் மற்றும் முதல் தளத்தில் மொத்தம் 10 கடைகள் உள்ளன. மற்ற தளங்களில் மொத்தம் 20 வீடுகள் உள்ளன. இங்கு 2-வது தளத்தில் ரகு (வயது 42) என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார்.

இவர் கிரசர் நிறுவனம் வைத்து எம்.சாண்ட் உற்பத்தி செய்து வருகிறார். இவருடைய மனைவி அனிதா (39), மகன் மித்திலேஷ் (12). நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் இவருடைய வீட்டின் படுக்கை அறையில் ஏ.சி. ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அந்த அறையில் யாரும் இல்லை. சிறுவன் மித்திலேஷ் தற்செயலாக அந்த அறைக்கு சென்றான்.

ஏ.சி. வெடித்து தீ விபத்து

அப்போது, மின்சார இணைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக ஏ.சி.யில் இருந்து திடீரென தீப்பிடித்துள்ளது. இதைப்பார்த்த சிறுவன் வெளியே ஓடிவந்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளான். அவர்கள் உடனடியாக காவலாளிக்கு தகவல் கூறி மின் இணைப்பை துண்டித்துள்ளனர். அதற்குள் ஏ.சி. வெடித்து கட்டிலில் இருந்த மெத்தையில் தீப்பிடித்து மள, மளவென எரியத்தொடங்கியது.

அத்துடன் அந்த அறையில் இருந்து கரும்புகை வெளியேறியதால் தீயை அணைக்க முடியவில்லை. இதனால் இதுபற்றி திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே உதவி மாவட்ட அலுவலர் (நிலையம்) சத்தியவர்த்தனன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அலறியடித்து ஓட்டம்

கரும்புகை அதிகமாக இருந்ததால், ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு தீயை சுமார் அரைமணி நேரம் போராடி அணைத்தனர். இதற்கிடையே தீவிபத்து நிகழ்ந்தவுடன் அந்த குடியிருப்பு முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால், அந்த குடியிருப்பில் இருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்து வீட்டை விட்டு வெளியேறினர். மேலும், தீயணைப்பு வீரர்கள் ஒவ்வொரு மாடியாக சென்று யாரேனும் வீட்டிற்குள் இருக்கிறார்களா? என்று பார்த்து, வீட்டில் இருந்தவர்களை வெளியேற்றினர். அப்போது 3-வது மாடியில் வயதான தம்பதியினர் இருப்பது தெரியவந்தது. உடனே அவர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டுவந்தனர். மேலும் அனைத்து வீடுகளின் மின்இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

கடை வாசலில் காத்திருப்பு

மேலும் சம்பவம் பற்றி அறிந்த செசன்சு கோர்ட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த குடியிருப்பு வாசிகளிடம் தீ விபத்தால் புகைமூட்டம் அனைத்து வீடுகளையும் சூழ்ந்து இருந்ததால் பாதுகாப்பு கருதி யாரும் குடியிருப்புக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.

இதனால், அந்த குடியிருப்பு வாசிகள் அனைவரும் இரவு 10 மணிக்கு மேலும் கீழ் தளத்தில் உள்ள கடை வாசலில் உட்கார்ந்து புகை வெளியேறும் வரை காத்திருந்தனர். இந்த தீவிபத்தில் படுக்கை அறையில் இருந்த கட்டில், மெத்தை, அலமாரியில் இருந்த துணிமணிகள் அனைத்தும் எரி்ந்து நாசமானது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்