பாலினத்தை அறிந்து கருக்கலைப்பு செய்யும் ஆஸ்பத்திரிகள் மீது கடும் நடவடிக்கை-கலெக்டர் சாந்தி எச்சரிக்கை
தர்மபுரி:
பாலினத்தை அறிந்து கருக்கலைப்பு செய்யும் ஆஸ்பத்திரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர்மபுரி கலெக்டர் சாந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கருத்தரங்கம்
தர்மபுரி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம்-பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு, மருத்துவம் மற்றும் சமூக நலத்துறை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் தர்மபுரி அதியமான் அரண்மனை கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
கருத்தரங்கில் கலெக்டர் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டம் அரசின் பல்வேறு குறியீடுகளில் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது பின்தங்கிய மாவட்டமாக இருந்த நிலையில், தற்போது அனைவரின் முயற்சியின் காரணமாக வளர்ந்து வரும் மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பொருளாதாரம் முக்கியமாக இருந்தாலும், மனிதவள குறியீடுகள் மேம்பாடு அடைவதே, உண்மையான வளர்ச்சியாக கருதப்படுகிறது.
பின்தங்கி உள்ளது
தர்மபுரி மாவட்டம் தற்போது வளர்ச்சி அடைந்து வந்தாலும், மருத்துவம் மற்றும் சுகாதார குறியீடுகளை பார்க்கும் போது குழந்தை இறப்பு விகிதம், பிரசவத்தின்போது தாய்மார்கள் இறப்பு விகிதம் உள்ளிட்ட சில குறியீடுகளில் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதனால் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இந்த குறியீடுகளை முன்னேற்றம் அடைய செய்வது நமது அனைவரின் கடைமையாகும்.
மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பாலின விகிதம் குறைவாக உள்ளது. பச்சிளம் குழந்தைகளின் இறப்பினை தடுத்திட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் குழந்தைகள் நல டாக்டர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தனியார் ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளில் குறைபாடுள்ள குழந்தைகளை தேவைப்பட்டால் உயர் சிகிச்சைக்காக பரிந்துரை செய்ய வேண்டும்.
கடுமையான நடவடிக்கை
அனைத்து பிரசவங்களும் டாக்டராலும், டாக்டரின் கண்காணிப்பில் மட்டுமே நடைபெற வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் ஸ்கேன் கருவியின் உதவியுடன் கருவின் பாலினத்தை தெரிவிக்கும் ஸ்கேன் மையங்கள், பாலினத்தை அறிந்து கருக்கலைப்பு செய்யும் ஆஸ்பத்திரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, பொதுமக்கள் மற்றும் டாக்டர்கள் அனைவரும் தங்களுக்கு உள்ள பொறுப்புகளையும், சமூக கடமைகளையும் அறிந்து தர்மபுரி மாவட்டம் மருத்துவம் மற்றும் சுகாதார குறியீட்டில் முன்னேற்றம் அடைய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சாந்தி பேசினார்.
இந்த கருத்தரங்கில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி, அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனை முதல்வர் அமுதவள்ளி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மகப்பேறு தலைமை டாக்டர் மலர்விழி, மாவட்ட சமூக நல அலுவலர் ஜான்சிராணி மற்றும் அதிகாரிகள், டாக்டர்கள் கலந்து கொண்டனர்.