பள்ளி மேல்நிலைப்பிரிவில் குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாத பாடப்பிரிவுகள் நீக்கம் - கல்வித்துறை அதிரடி உத்தரவு
குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு, அதில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
பள்ளி மேல்நிலைப்பிரிவுகளை பொறுத்தவரையில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்சி, மாநகராட்சி பகுதியாக இருந்தால் குறைந்தபட்சம் 30 மாணவர்களும், ஏனைய ஊரக பகுதியாக இருப்பின் குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை 15 ஆகவும் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வித் துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு, அதில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேல்நிலைப்பிரிவில் 60 மாணவர்கள் வரை ஒரு பிரிவாகவும், அதற்கு மேல் ஒவ்வொரு 40 மாணவர்களுக்கும் கூடுதல் பிரிவும் ஏற்படுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்யும் போது, ஒரு ஆசிரியருக்கு வாரத்துக்கு 28 பாடவேளைகள் ஒதுக்கீடு உள்ளதா? என்று கண்காணிக்கவும், அவ்வாறு போதிய பாடவேளையின்றி உள்ள முதுகலை ஆசிரியரை உரிய முறையில் அதற்கு கீழ்நிலை வகுப்புகளான 9,10-ம் வகுப்புகளுக்கு கற்பிக்க பாடவேளைகளை ஒதுக்கீடு செய்யவும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
இதுதொடர்பான புள்ளி விவரங்களை அந்தந்த பள்ளிகள் தயார்செய்து, அதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக, பள்ளிக்கல்வி ஆணையரகத்துக்கு வருகிற 26-ந்தேதி முதல் 30-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.