அப்துல் கலாம் நினைவு தினம்: 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவர்கள் சாதனை...!

அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி கின்னஸ் சாதனை செய்ய ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2022-07-27 07:18 GMT

ராமேசுவரம்,

முன்னாள் குடியரசு தலைவரும், ஏவுகணை விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் உலக புகழ் பெற்ற ராமேசுவரத்தில் பிறந்தார்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பாதுகாப்பு துறையில் பணியாற்றி அணுகுண்டு சோதனை, செயற்கைகோள் வடிவமைத்தல், அக்னி ஏவுகணை உருவாக்குவதில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.

மாணவர்களின் எழுச்சி நாயகனாகவும், இளைஞர்களின் கனவு நாயகனாகவும், இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதை குறிக்கோளாக கொண்டு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தினார்.

அந்த வகையில் 2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடும்போது அப்துல்கலாமுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவரது நினைவைப் போற்றும் வகையில், மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவில் ராமேஸ்வரம் பேக்கரும்பில் நினைவிடம் அமைத்தது. அந்த நினைவிடத்தில் அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு குறித்து வாசகங்கள் அமைக்கப்பட்டும், அவர் பயன்படுத்திய உடைமைகளும் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் ராமேசுவரத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஏ.பி.ஜே அப்துல் கலாம் பவுண்டேஷன் மற்றும் தற்காப்பு மையம் சார்பில் ராமநாதபுரம்,சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டத்தைச் சேர்ந்த பல பள்ளிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர்ந்து 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி கின்னஸ் சாதனை படைக்கும் பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்