விழுப்புரத்தில்2 ஆண்டுகளாக மூடியே கிடக்கும் ஆவின் விற்பனையகம்மீண்டும் செயல்பட பொதுமக்கள் கோரிக்கை

விழுப்புரத்தில் 2 ஆண்டுகளாக மூடியே கிடக்கும் ஆவின் விற்பனையகத்தை மீண்டும் செயல்பட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Update: 2023-07-16 18:45 GMT


தமிழகத்தில் உள்ள ஊரக பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதார நிலையை கருத்தில் கொண்டும் அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாநிலத்தில் உள்ள நுகர்வோர்களுக்கு சரியான விலையில் தரம் மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்க செய்ய வேண்டும் எனும் நல்நோக்கத்துடனும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) தோற்றுவிக்கப்பட்டு ஒரு வணிக நிறுவனமாக மட்டுமல்லாமல் ஒரு சமூக இயக்கமாகவும் இயங்கி வருகிறது.

மக்களிடம் வரவேற்பை பெற்றது

இந்த ஆவின் நிறுவனத்தின் ஒன்றியங்களில் உள்ள பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் பால் மற்றும் தயாரிக்கப்படும் பல்வேறு பால் பொருட்களை விற்பனை செய்வதற்கென ஆங்காங்கே முக்கிய இடங்களில் தனி விற்பனைப்பிரிவு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அதேபோல் விழுப்புரம் ஆவின் நிறுவனம் சார்பில் நகர்ப்புறம் மற்றும் புறநகர் சார்ந்த பகுதிகளில் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக ஆங்காங்கே விற்பனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஆவின் பால் மற்றும் பல்வேறு வகையான பால் பொருட்களை மலிவு விலையில் ஆவின் நிறுவனம் மூலமாகவே விற்பனை செய்ய ஏதுவாக கடந்த 2020-ல் ஆவின் சந்திப்பு விற்பனை மையம் திறக்கப்பட்டது. இந்த விற்பனையகத்தில் சமன்படுத்திய பால், நிலைப்படுத்திய பால், நிறைகொழுப்பு பால், இருநிலை சமன்படுத்திய பால் மற்றும் பால் பொருட்களான நெய், வெண்ணெய், மோர், தயிர், லஸ்ஸி, யோகர்ட், குலாப்ஜாமுன், ரசகுல்லா, நெய் மைசூர்பா, பால்கோவா, மில்க் ஷேக், மில்க் பேடா, பன்னீர், பாதாம் மிக்ஸ் பவுடர் மற்றும் பலவித நறுமணப்பால், ஐஸ்கிரீம் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்த விற்பனையகத்திற்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக குடிநீர், கழிவறை வசதி, காற்றோட்டமான வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் என அனைத்து அடிப்படை வசதிகளுமே செய்யப்பட்டன.அதுமட்டுமின்றி குழந்தைகளை கவரும் வகையில் விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய சிறு பூங்காவும் அம்மையத்தின் வளாகத்திலேயே அமைக்கப்பட்டு சிறந்த முறையில் இயங்கியது.

மூடியே கிடக்கும் விற்பனையகம்

இந்த விற்பனையகத்தில் மலிவு விலையில் அனைத்து பொருட்களுமே விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்றது. சென்னை- திருச்சி மார்க்கங்களில் செல்பவர்கள் பலரும் அதிகளவில், இங்குள்ள ஆவின் சந்திப்பு விற்பனையகத்திற்கு வந்து ஆவின் பால், பால் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கிச்சென்றனர். இதன் மூலம் ஆவின் பொருட்களின் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக வார விடுமுறை நாட்களில் விற்பனை மேலும் அதிகரித்தது.

ஆனால் நாளடைவில், ஆவின் நிர்வாகம், இந்த விற்பனை மையத்தை தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் நடத்த ஏற்பாடு செய்தது. இதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட தொகை அதிகளவில் நிர்ணயம் செய்யப்பட்டதால் யாரும் இதனை ஒப்பந்தம் எடுக்க முன்வரவில்லை. இதன் காரணமாக திறக்கப்பட்ட ஓராண்டிலேயே அதாவது 2021-ம் ஆண்டில் ஆவின் சந்திப்பு விற்பனையகம் மூடப்பட்டது.

சமூகவிரோதிகளின் கூடாரமாக...

அதன் பிறகு இந்த விற்பனையகத்தை திறக்க இதுநாள் வரையிலும் சம்பந்தப்பட்ட ஆவின் நிறுவனம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த விற்பனையகத்தில் உள்ள பர்னிச்சர் பொருட்கள் அனைத்தும் மக்கி வீணாகி வருகிறது.

மேலும் கடந்த 2 ஆண்டுகளாக அந்த ஆவின் சந்திப்பு விற்பனையகம் பயன்பாடின்றி பூட்டியே கிடப்பதால் அது தற்போது சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இரவு நேரங்கள் மட்டுமில்லாது சில சமயங்களில் பகல் வேளையிலேயே, சமூகவிரோதிகள் அந்த விற்பனையக வளாகத்தில் அமர்ந்து மது அருந்துவது, சூதாடுவது போன்ற பலவித சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள சிறுவர்களுக்கான பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கிறது.

மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா?

பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட ஆவின் சந்திப்பு விற்பனையகத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே நான்குவழிச்சாலை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக ஜானகிபுரம் புறவழிச்சாலை பகுதியில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால் விரைவில் நான்கு வழிச்சாலை மற்றும் மேம்பாலங்கள் பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் வாகன போக்குவரத்து இன்னும் அதிகமாக இருக்கும். எனவே பயன்பாடின்றி மூடியே கிடக்கும் ஆவின் சந்திப்பு விற்பனையகத்தை மீண்டும் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் ஆவின் பொருட்கள் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எப்படி ஆவின் நிறுவனத்தின் முன்புற பகுதியில் உள்ள விற்பனை மையம் 24 மணி நேரமும் செயல்படுகிறதோ அதேபோன்று இங்குள்ள புறவழிச்சாலை பகுதியில் இருக்கும் ஆவின் சந்திப்பு விற்பனையகத்தையும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து 24 மணி நேரமும் செயல்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்