ஆத்துப்பாளையம் தடுப்பணை நிரம்பியது

Update: 2022-08-18 16:05 GMT


முத்தூர் அருகே சின்னமுத்தூர் நொய்யல் ஆற்றில் இருந்து கால்வாயில் 2 முறை திறக்கப்பட்ட தண்ணீரால் கரூர் மாவட்டத்தில் உள்ள ஆத்துப்பாளையம் தடுப்பணை நிரம்பியது.

நொய்யல் தடுப்பணை

திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள சின்னமுத்தூரில் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையை கடந்து அதிக மழைநீர் வெள்ளம் செல்லும் காலங்களில் அணையின் பிரதான 9 மதகுகளில் 8 மதகுகளை அடைத்து கால்வாய் வழியாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா க.பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட கார்வழி ஊராட்சி ஆத்துப்பாளையம் தடுப்பணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 2 மாதமாக பெய்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

குடிநீர் ஆதாஆத்துப்பாளையம் தடுப்பணை நிரம்பியதுஆத்துப்பாளையம் தடுப்பணை நிரம்பியதுரம்

கரூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் தடுப்பணை சுற்றுவட்டார கிராம பகுதி விவசாயிகள் பாசனத்திற்காகவும், குடிநீர் ஆதாரம் பாதுகாக்கவும் உடனடியாக நொய்யல் ஆற்றில் இருந்து கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் சின்னமுத்தூர் நொய்யல் தடுப்பணையில் இருந்து ஆத்துப்பாளையம் தடுப்பணைக்கு தண்ணீர் திறந்துவிட்டனர்.

நொய்யல் ஆற்றில் இருந்து 18 நாட்கள் இடைவிடாது கால்வாய் வழியாக இருகரைகளையும் தொட்டபடி ஆத்துப்பாளையம் தடுப்பணைக்கு தண்ணீர் சீறி பாய்ந்தது.

தடுப்பணை நிரம்பியது

ஆத்துப்பாளையம் தடுப்பணை அதன் முழு கொள்ளளவான 18 அடியை நேற்று முன்தினம் இரவு முதல் எட்டி நிரம்பியது. இதையடுத்து நொய்யல் ஆற்றில் இருந்து ஆத்துப்பாளையம் தடுப்பணைக்கு கால்வாய் வழியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் உடனடியாக பொதுப்பணித்துறை மூலம் நிறுத்தப்பட்டது.

இதனால் ஆத்துப்பாளையம் தடுப்பணையில் தண்ணீர் தேங்கி நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனால் கரூர் மாவட்டம் கார்வழி, துக்காச்சி, அஞ்சூர், தென்னிலை கீழ்பாகம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் கரூர் மாவட்டம் பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட நகர மற்றும் கிராம பகுதிகளில் சுமார் 4 லட்சம் பேர் பயன் பெறும் வகையில் கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் ஆதாரம் பாதுகாக்கப்பட்டு உள்ளது. எனவே நிரம்பி உள்ள ஆத்துப்பாளையம் தடுப்பணையில் இருந்து உடனடியாக வேளாண் சாகுபடி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கரூர் மாவட்ட நிர்வாகத்திற்கு தற்போது கோரிக்கை விடுத்து உள்ளனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

மேலும் சின்ன முத்தூர் நொய்யல் ஆற்றில் இருந்து கால்வாய் வழியாக திறக்கப்பட்ட தண்ணீரால் ஆத்துப்பாளையம் தடுப்பணை கடந்த 10 மாதங்களில் 2 முறையாக நிரம்பியுள்ளதால் கரூர் மாவட்டம் க.பரமத்தி தாலூகா நகர மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்