நெய்வேலி போராட்டத்தில் நடந்த வன்முறைக்கு பா.ம.க. நிர்வாகிகள் பொறுப்பல்ல

கைதான 42 பேரோடு வழக்கை முடியுங்கள் என்றும், நெய்வேலி போராட்டத்தில் நடந்த வன்முறைக்கு பா.ம.க. நிர்வாகிகள் பொறுப்பல்ல என்றும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம், பா.ம.க.வக்கீல்கள் மனு அளித்தனர்.

Update: 2023-07-31 18:45 GMT

பா.ம.க.வின் சமூக நீதி பேரவை மாநில பொருளாளர் வக்கீல் தமிழரசன் தலைமையில் அக்கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர்கள் வக்கீல் சண்.முத்துக்கிருஷ்ணன், வடக்குத்து ஜெகன், மாநில மாணவர் அணி வக்கீல் கோபிநாத், மாநகராட்சி கவுன்சிலர் சரவணன் மற்றும் பா.ம.க. வக்கீல்கள் நேற்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அதில், நெய்வேலி போராட்டத்தில் நடந்த வன்முறைக்கு பா.ம.க. நிர்வாகிகள் பொறுப்பல்ல என்று கூறியிருந்ததோடு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர். பின்னர் இது பற்றி வக்கீல் தமிழரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ம.க. நிர்வாகிகள் பொறுப்பல்ல

என்.எல்.சி. நிர்வாகம் 2-வது சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து கடந்த 28-ந்தேதி நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடந்தது. அந்த சமயத்தில் சில அசம்பாவித சம்பவங்கள் நடந்தது. தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் வேறு நபர்கள் தொடர்பில் இருந்தது போல், இந்த சம்பவத்திலும் வேறு நபர்கள் ஈடுபட்டு இருக்கலாம். இந்த வன்முறை சம்பவத்திற்கு பா.ம.க. நிர்வாகிகள் பொறுப்பல்ல.

42 பேரோடு வழக்கை முடியுங்கள்

அப்படி இருந்தும் பா.ம.க.வினர் மீது போலீஸ் வாகனத்தை உடைத்ததாகவும், கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்து 42 பேரை கைது செய்து உள்ளனர். இது மட்டும் இன்றி கிராமங்களுக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் சென்று பா.ம.க.வை சேர்ந்த நிர்வாகிகள் வீடுகளில் போலீசார் சோதனை செய்து பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

எனவே கைது செய்யப்பட்ட 42 பேரோடு வழக்கை முடிக்க வேண்டும் என்று கூறினோம். ஆனால் இந்த வழக்கில் கட்சியினர் சிலருக்கு தொடர்பு உள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் போலீஸ் சூப்பிரண்டு கூறினார். அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு தருவதாக கூறி உள்ளோம்.

போலீசார் தொந்தரவு

போலீசார் தொந்தரவு இனி இருக்காது என்று கருதுகிறோம். முதலில் கைது செய்யப்பட்ட 28 பேருக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளோம். பா.ம.க. சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் வேறு நபர்கள் யாராவது ஊடுருவி உள்ளார்களா? என்பதனை கண்டறிந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்