ஆனி அமாவாசை விழா

Update: 2022-06-28 15:51 GMT


உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஓரே குன்றில் ஒன்றாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்து உள்ளது.அருவியில் குளித்து மகிழவும் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்யவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.

அமணலிங்கேஸ்வரர் கோவில் அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம், மகாசிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஆனி அமாவாசையை யொட்டி சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வாகனங்கள் மற்றும் பஸ் மூலமாகவும் திருமூர்த்தி மலைக்கு வருகை தந்தனர். பின்னர் மலைமீது உள்ள பஞ்சலிங்க நீர்வீழ்ச்சிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். அதன் பின்பு அடிவாரப் பகுதிக்கு வருகை தந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மும்மூர்த்திகள், விநாயகர், சுப்பிரமணியர், சப்தகன்னிகளுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதனால் கோவில் மற்றும் அருவிப் பகுதியில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. அதேபோன்று உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கோடந்தூர் கட்டளை மாரியம்மன் கோவிலில் அமாவாசையை ஒட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

மேலும் செய்திகள்