சின்ன சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா
அம்பை சின்ன சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா நடந்தது.
அம்பை:
அம்பை தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சின்ன சங்கரன் கோவில் என்று அழைக்கப்படும் கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் காலை, மாலை என இரு வேளைகளிலும் சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடத்தப்பட்டு ஒவ்வொரு வாகனங்களில் சுவாமி - அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் வழங்கினர்.
ஆடித்தபசு நாளான நேற்று கோமதியம்மனை தரிசனம் செய்ய சின்ன சங்கரன்கோவிலில் அம்பை, விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்தனர். மாலை 6 மணிக்கு மேல் நடைபெற்ற ஆடித்தபசு விழாவையொட்டி தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் சிவனும், விஷ்ணுவும் சேர்ந்து சங்கரநாராயணராக வந்து கோமதி அம்மனுக்கு தபசு காட்சியளித்தார். தொடர்ந்து கோவிலில் திருக்கல்யாணமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்கரலிங்க சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் முருக சுவாமிநாதன், அகஸ்தீஸ்வரர் அறங்காவலர் குழு தலைவர் சங்கு சபாபதி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். அகஸ்தியர் அன்னதான கமிட்டி சார்பில் காலை 8 மணி முதல் இரவு வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.