முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழா

முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-07-23 16:03 GMT

ஆரணி

முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

காவடி ஊர்வலம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழா இன்று நடந்தது.

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் வலம் வந்தனர்.

ஆரணி

ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமிக்கு பாலாபிஷேகம், மகா அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இரவில் உற்சவர் சாமியை கோவில் உள்வளாக உலா நடந்தது.

கொசப்பாளையம் பகுதியில் உள்ள பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக காவடி எடுத்து வந்தனர்.

இதேபோல் சின்னக்கடை வீதி பழனியாண்டவர் கோவில், ஆரணிபாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவில், வெள்ளேரி கிராமத்தில் பாலமுருகர் கோவில், குன்னத்தூர் சுப்பிரமணிய சாமி கோவில்களில் ஆடி கிருத்திகை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் அருகே சோமாசிபாடி கோவில்மேடு பகுதியில் குன்றின் மீது அமைந்துள்ள பாலசுப்பிரமணியர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பக்தர்கள் பலர் முதுகில் அலகு குத்தி பூந்தேர்களை இழுத்து கொண்டும், பலர் வாயில் நீண்ட வேல்களை குத்திக்கொண்டும், பால்காவடி, பன்னீர்காவடி உள்பட பல்வேறு வகையான காவடிகளை எடுத்து வந்து கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு சாமி வீதி உலா நடந்தது.

செக்கு இழுத்த பக்தர்

கீழ்பென்னாத்தூர் அருகே நாடழகானந்தல்புதூரில் உள்ள சக்திவேல்சாந்தமுருகன் கோவிலில் 50-ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு பக்தர்கள் 108 பால்குடம் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று கோவிலை அடைந்தனர்.

அங்கு முருகருக்கு அபிஷேக, ஆராதனை, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு வழிபாடு, தீபாராதனை நடந்தது.

பக்தர்கள் பலரும் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், மார்பு மீது உரல் வைத்து மஞ்சள் இடித்தல், மிளகாய் தூள் அபிஷேகம், செக்கிழுத்து எண்ணை பிழிதல் போன்றவற்றில் ஈடுபட்டனர். பக்தர் ஒருவர் எண்ணெயில் வடையை கையால் சுட்டு எடுத்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு சாமி வீதி உலா நடந்தது.

வாணாபுரம்

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்திக்கொண்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பழையனூர் கோட்டை மலை முருகன் கோவிலில் பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சென்று முருகனை தரிசனம் செய்தனர்.

இதேபோல் குங்கிலியநத்தம், வாணாபுரம், தச்சம்பட்டு, வாழவச்சனூர், கொட்டையூர், அகரம் பள்ளிப்பட்டு உள்ளிட்ட முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

வந்தவாசி

வந்தவாசி சத்யா நகரில் உள்ள பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து 101 பக்தர்கள் பால்குடத்துடன் ஊர்வலமாக வந்து சாமிக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கலசபாக்கம்

கலசபாக்கம் தாலுகாவிற்கு உட்பட்ட எலத்தூர்மோட்டூர் நட்சத்திர சிவசுப்பிரமணியர் சாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தி வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

காஞ்சி குன்றுமேடு பாலசுப்பிரமணியர் கோவிலில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் காவடி எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மூலவர் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தேவனாம்பட்டு ஊராட்சி தேவகிரிமலை மீது அமைந்துள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செய்தனர். இரவு சாமி வீதி உலாநடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்