ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா தொடங்கியது

ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 31-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

Update: 2022-07-23 17:06 GMT

ராமேசுவரம், 

ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 31-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

ஆடி திருக்கல்யாண திருவிழா

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் மாசி மகா சிவராத்திரி திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அடுத்த மாதம்(ஆகஸ்டு) 8-ந்தேதி வரை 17 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுகிறது.

விழாவின் முதல் நாளான நேற்று பகல் 11 மணி அளவில் கோவிலின் அம்மன் சன்னதி மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு புனித தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் கொடிமரம் மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

நேற்று இரவு பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் ரத வீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தேரோட்டம்-திருக்கல்யாணம்

திருவிழாவின் 2-ம் நாளான இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை அம்பாள் தங்கப்பல்லக்கிலும், இரவு தங்க காமதேனு வாகனத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

9-வது நாள் நிகழ்ச்சியாக 31-ந் தேதி அன்று காலையில் அம்பாள் தேரோட்டம் நடைபெறுகிறது.

விழாவின் 11-ம் நாளான வருகின்ற 2-ந் தேதி பகல் 2 மணியிலிருந்து 3 மணிக்குள் ராமர்தீர்த்தம் தபசு மண்டகப்படியில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், மறுநாள் (3-ந் தேதி) இரவில் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

17-ம் நாள் மற்றும் கடைசி நாள் நிகழ்ச்சியாக சுவாமி-அம்பாள் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துவருகிறது.

நேற்று நடந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் மாரியப்பன், ராமேசுவரம் நகரசபை தலைவர் நாசர்கான், துணை தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி, அ.தி.மு.க. நகர செயலாளர் கே.கே.அர்ஜுனன், காங்கிரஸ் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் பாரிராஜன், இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன், இந்து தேசிய கட்சி மாவட்ட தலைவர் ஹரிசர்மா, மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்