ஆடி பெருந்திருவிழா: கள்ளழகர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

கள்ளழகர் கோவில் ஆடி பெருந்திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-08-01 20:22 GMT

அழகர்கோவில்,


கள்ளழகர் கோவில் ஆடி பெருந்திருவிழா தேேராட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கள்ளழகர் கோவில்

திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்ற பெருமைகளை பெற்றதும், 108 வைணவ தலங்களில் முக்கிய தலங்களில் ஒன்றாகவும் மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் விளங்கி வருகிறது.

இங்கு நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆடிப்பெருந்திருவிழாவாகும்.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அன்னம், சிம்மம், அனுமன், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் அழகர் காட்சி தந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடந்தது,

தேரோட்டம்

இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு திருத்தேருக்கு கள்ளழகர் என பக்தர்கள் அழைக்கும் சுந்தரராஜ பெருமாள், தேவியருடன் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 8.10 மணிக்கு திருத்தேர் வடங்களை பிடித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்தனர். தேருக்கு முன்னும் பின்னும் கைகளில் தடிகள், தீப்பந்தம் ஏந்தி உடம்பெல்லாம் சந்தனம் பூசியபடி சாமி ஆடிக்கொண்டு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர்.

பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆடி அசைந்து 4 கோட்டை வாசல் பிரகாரம் வழியாக வந்து பகல் 12 மணிக்கு நிலைக்கு நின்றது.

மேலும் பக்தர்கள் மேளதாள இசையுடன் சந்தன குடங்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலுக்கு சென்று சந்தனம் சாத்துபடி செய்தும்., பொங்கல் வைத்து, கிடாய் வெட்டியும், அன்னதானம் வழங்கியும் தங்களது நேர்த்திக்கடனை ெசலுத்தினர்.

நெய்விளக்கு ஏற்றினர்

இதைதொடர்ந்து இன்று புஷ்ப சப்பரத்திலும், நாளை (3-ந் தேதி) ஆடி 18-ம் பெருக்கு நாளில் உற்சவ சாந்தி நடைபெறும். இத்துடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.

ேநற்று பக்தர்கள் அழகர்மலை நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவில், ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோவிலிலும், பதினெட்டாம் படி கருப்பணசுவாமி கோவிலிலும் நீண்ட வரிசையில் நின்று நெய் விளக்குகள் ஏற்றி தரிசனம் செய்தனர்.

அமைச்சர் பங்கேற்பு

ேதரோட்டத்தில் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, கோவில் தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., ஒன்றிய குழு தலைவர் பொன்னுச்சாமி, பேரூராட்சி தலைவர் குமரன், ஊராட்சி மன்ற தலைவர் தீபா தங்கம், தி.மு.க. செயலாளர் முத்துபொருள் மற்றும் வருவாய், அறநிலைய துறை, அதிகாரிகள், திருக்கோவில் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நேற்று பக்தர்கள் நெல் தானியங்கள், கன்று குட்டிகள், அரிவாள்கள் போன்றவற்றை காணிக்கையாக செலுத்தி, கோவில் பிரசாதமான சம்பா தோசையை விரும்பி வாங்கி சென்றனர். தேர்திருவிழாவை காண மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும், கேரளா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்ட சூப்பிரண்டு சிவபிரசாத் மேற்பார்வையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்