வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலியை பறிக்க முயன்ற வாலிபர் கைது
கறம்பக்குடி அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலியை பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கிலி பறிக்க முயற்சி
கறம்பக்குடி அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜலெட்சுமி (வயது 25). இவர் நேற்று முன்தினம் இரவு மாமியார் மற்றும் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 3 மணியளவில் மர்ம ஆசாமி ஒருவர் ராஜலெட்சுமி கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதைக்கண்ட அவர் கூச்சல் போட்டார். இதனால் பீதியடைந்த அந்த ஆசாமி அங்கிருந்து தப்பிச் சென்றார். இது குறித்து ராஜலெட்சுமி அளித்த புகாரின் பேரில் கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சிறையில் அடைப்பு
இந்தநிலையில் புதுப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் திருமயம் தாலுகா மேல துருவாசபுரம் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் மாதவன் (24) என்பதும், அவர் ராஜலெட்சுமி அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து மாதவனை கறம்பக்குடி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஆலங்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.