வடலூரில் மூதாட்டியிடம் நகை அபேஸ் செய்த வாலிபர் கைது
மூதாட்டியிடம் நகை அபேஸ் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வடலூர்,
வடலூர் அருகே உள்ள தென்குத்து புதுநகர் காலனி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மனைவி விருத்தாம்பாள் (வயது 70). கோவிந்தன் இறந்து விட்டதால், விருத்தாம்பாள் மட்டும் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விருத்தாம்பாள், வீட்டில் இருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், உங்களுக்கு முதியோர் உதவித்தொகைக்கான பணம் வாங்கி தருகிறேன். ஆனால் நகை அணிந்து இருந்தால், அதிகாரிகள் உதவித்தொகை தரமாட்டார்கள். எனவே நகையை கழற்றி தாருங்கள், ஒரு பேப்பரில் மடித்து தருகிறேன் என்று கூறியுள்ளார். இதை நம்பிய விருத்தாம்பாள், தான் அணிந்திருந்த 2 கிராம் நகையை கழற்றி அந்த வாலிபரிடம் கொடுத்துள்ளார். அந்த நகையை வாங்கிய அவர், அதை தனது சட்டைப்பையில் வைத்துக்கொண்டார். பின்னர் ஒரு பேப்பரில் 2 சிறிய கற்களை வைத்துவிட்டு அதை விருத்தாம்பாளிடம் கொடுத்தார்.
பிடிபட்டார்
இதையடுத்து, நீங்கள் வீட்டில் இருங்கள், நான் அதிகாரியை அழைத்து வருகிறேன் என்று கூறி அந்த நபர் தான் வந்த மோட்டார் சைக்கிளில் சென்றார். வீட்டிற்குள் சென்ற விருத்தாம்பாள், அந்த பேப்பரை பிரித்து பார்த்தபோது, அதில் சிறிய கற்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் வெளியில் சென்று திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். இந்த சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து அந்த நபரை மடக்கிப்பிடித்து வடலூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள முடிகண்டநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த சாமிதுரை மகன் சரத்குமார் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து சரத்குமாரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த நகையை பறிமுதல் செய்தனர்.