மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை கீழே விழ வைத்து பணம்-செல்போன் பறிப்பு -2 பேர் கைது

மதுரையில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை கீழே விழ வைத்து பணம்-செல்போன் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-27 21:24 GMT


மதுரையில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை கீழே விழ வைத்து பணம்-செல்போன் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பணம், செல்போன் பறிப்பு

மதுரை மாவட்டம் மேலூர் உலகநாதபுரம், கள்ளழகர் நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஆதித்யன் (வயது 22). இவர் சர்வேயர் காலனி 120 அடி ரோட்டில் உள்ள மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் ஊழியராக உள்ளார். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அப்போது அவரை மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின்தொடர்ந்து வந்தனர்.

பாண்டிகோவில் பை-பாஸ் ரோட்டில் ஆதித்யன் சென்ற போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை சுற்றி வளைத்து கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர் அவரிடமிருந்து செல்போன் மற்றும் 2 ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டு தப்பி விட்டனர்.

வாகன சோதனை

இது குறித்து அவர் மாட்டுத்தாவணி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.. இதற்கிடையில் வாலிபரிடம் செல்போன், பணம் பறித்தவர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில் அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமார், மாட்டுத்தாவணி இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்தின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு அந்த பகுதியில் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

2 பேர் கைது

அதில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை முத்தனேந்தல் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (31), கொட்டாம்பட்டி நாகமங்கலத்தை சேர்ந்த தமிம்அன்சாரி (23) என்பதும், அவர்கள் தான் மோட்டார் சைக்கிளை மோதி ஆதித்யனிடம் பணம், செல்போன் பறித்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்