கலெக்டர் அலுவலகத்தில் 5 குழந்தைகளுடன் வந்த இளம்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு 5 குழந்தைகளுடன் வந்த இளம்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு 5 குழந்தைகளுடன் வந்த இளம்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
குறை தீர்க்கும் கூட்டம்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வருபவர்கள் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு, அங்கு இருபுறமும் 100 மீட்டர் தொலைவுக்கு இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
தீக்குளிக்க முயற்சி
இடிந்தகரை அருகே உள்ள கூத்தங்குழி பாத்திமாநகரை சேர்ந்த டொனிலா (வயது 28) என்பவர் தனது 5 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். அவர் கலெக்டர் அலுவலகம் முன் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கேனை திறந்து, அதிலிருந்த மண்எண்ணெயை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் மீஹா மற்றும் போலீசார் விரைந்து சென்று டொனிலாவை தடுத்து அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றி, அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார்.
நிவாரணம்
அதன்பிறகு போலீசார் டொனிலாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-
எனக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் என 5 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு எனது கணவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். ஆனால் குழந்தைகளை பராமரிக்க இதுவரை மாதாந்திர நிவாரணம் எதுவும் வழங்கவில்லை. எனவே நான் எனது 5 குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறேன்.
எனது கணவரிடம் இருந்து நிவாரணம் வாங்கி தரக்கோரி கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பலத்த பாதுகாப்பு
இந்த சம்பவத்தை தொடர்ந்து நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் தலைமையில் உதவி கமிஷனர் பிரதீப் நேரடி மேற்பார்வையில் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.