பட்டாசு ஆலை வெடி விபத்தில் இளம்பெண் பலி

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் இளம்பெண் ஒருவர் பலியானார். 13 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமானது.

Update: 2023-04-22 19:35 GMT

தாயில்பட்டி, 

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் இளம்பெண் ஒருவர் பலியானார். 13 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமானது.

பட்டாசு ஆலை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம் பண்ணையை சேர்ந்தவர், கேசவன் (வயது 50). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை கங்கரக்கோட்டை ஊராட்சி மார்க்கநாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்றது. இங்கு பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த பட்டாசு ஆலையில் 60 அறைகளில் பட்டாசு தயாரிப்பு பணி நடந்துவந்தது. 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்தனர். நேற்று காலையும் பட்டாசு தயாரிப்பு பணிகள் நடந்து வந்தன.

பெண் பலி

மதியம் 3 மணி அளவில் பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் வைத்திருந்த அறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 அறைகள் முற்றிலும் தீப்பிடித்து எரிந்தன. அப்போது அந்த அறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மார்க்கநாதபுரத்தைச் சேர்ந்த அருணாசலம் என்பவருடைய மனைவி ஜெயசித்ரா (வயது 24) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற ெதாழிலாளர்கள் அங்கிருந்து ஓடி உயிர் தப்பினர்.

13 மோட்டார்சைக்கிள்கள் நாசம்

சம்பவம் நடந்த பகுதியில் நிறுத்தப்பட்ட பட்டாசு தொழிலாளர்களின் 13 மோட்டார்சைக்கிள்கள் எரிந்து நாசமானது. ஏழாயிரம் பண்ணை மற்றும் சாத்தூர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வெம்பக்கோட்டை தாசில்தார் ரெங்கநாதன், சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி, வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

வெடி விபத்து குறித்து மார்க்கநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர் பொன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வெடிவிபத்தில் பலியான ஜெயசித்ராவிற்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த சம்பவத்தில் முற்றிலும் எரிந்து நாசமான இருசக்கர வாகனங்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்