முல்லைப்பெரியாற்றில் குளிக்க சென்ற வாலிபர் கதி என்ன?; தேடும் பணியில் தீயணைப்பு படைவீரர்கள் தீவிரம்
உத்தமபாளையம் அருகே முல்லைப்பெரியாற்றில் வாலிபர் மூழ்கினார். அவரை தீயணைப்பு படைவீரர்கள் தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி, ஆசாரி தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அசோக்குமார் (வயது 25). இவர் இன்று தனது உறவினர்களுடன் அனுமந்தன்பட்டி சடையாண்டி கோவில் அருகே உள்ள முல்லைப்பெரியாற்றுக்கு குளிக்க சென்றார்.
அங்கு அனைவரும் ஆற்றில் உற்சாகமாக குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது அசோக்குமார் மட்டும் திடீரென்று ஆற்றில் மூழ்கினார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் சிலர், ஆற்றில் குதித்து அசோக்குமாரை தேடி பார்த்தனர். ஆனால் அவரை மீட்க முடியவில்லை.
பின்னர் உடனடியாக இதுகுறித்து உத்தமபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் ஆற்றில் இறங்கி அசோக்குமாரை தீவிரமாக தேடினர். அனுமந்தன்பட்டியில் இருந்து உத்தமபாளையம், அம்மாபட்டி, குச்சனூர், உப்புக்கோட்டை உள்ளிட்ட முல்லைப்பெரியாறு ஓடும் பகுதிகளில் தேடி பார்த்தனர்.
இந்த தேடுதல் வேட்டை நேற்றிரவு 7 மணி வரை தொடர்ந்தது. ஆனால் அசோக்குமார் கதி என்ன என்று தெரியவில்லை. இருப்பினும் அவரை தேடும் பணி இன்று (வியாழக்கிழமை) தொடரும் என்று தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.