இளம்பெண்ணை லாட்ஜில் அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தல் வாலிபர் கைது

நாகர்கோவிலில் இளம்பெண்ணை லாட்ஜில் அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-03 19:32 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் இளம்பெண்ணை லாட்ஜில் அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் துன்புறுத்தல்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வெள்ளத்தூவல் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளம்பெண் ஒருவர் சில வாரங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இளம்பெண்ணின் பெற்றோர் வெள்ளத்தூவல் போலீஸ் நிலைத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வந்தனர். பின்னர் சில நாட்களுக்கு பிறகு இளம்பெண் மீட்கப்பட்டார்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது மனநலம் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே செல்வதும், பின்னர் வீடு திரும்புவதுமாக இருந்துள்ளார். அவ்வாறு சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற இளம்பெண்ணை, வாலிபர் ஒருவர் பஸ்சில் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் அவரை லாட்ஜில் அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரியவந்தது.

வாலிபர் கைது

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை கேரள போலீசில் புகார் கொடுத்தார். சம்பவம் நடந்த இடம் நாகர்கோவில் என்பதால் இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

அதன்பேரில் சம்பந்தப்பட்ட வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுந்தர நாச்சியார்புரத்தை சேர்ந்த அஜித் கிளிண்டன் (வயது 25) என்பது தெரியவந்தது. இந்த நிலையில் அஜித் கிளிண்டனை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்