ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமாரியை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மகள் அனுசியா தேவி (வயது 21). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சக தோழிகளுடன் தங்கி சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள பிரபல செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
நேற்று காலை சக தோழிகள் வேலைக்கு செல்லும் போது அனுசியா தேவி வேலைக்கு செல்லாமல் சோகமாக, தான் வேலைக்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.
சக தோழிகள் வேலைக்கு சென்று விட்டு தாங்கள் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து பார்த்தபோது அனுசியா தேவியை காணவில்லை. படுக்கையறை உள்பக்கம் தாளிட்டிருப்பதை பார்த்து அதிர்ந்த சக தோழிகள் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அனுசியா தேவி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து சக தோழிகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.