சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தொழிலாளி, குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தொழிலாளி, குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலை முயற்சி
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் தினேஷ்குப்தா. இவருடைய மனைவி லட்சுமி. கணவன்- மனைவி இருவரும் தங்களது 4 வயது பெண் குழந்தையை அழைத்துக்கொண்டு சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தனர். அவர்கள் திடீரென்று தான் மறைத்து வைத்து கொண்டு வந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.
இதை பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதுடன் அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கணவன்- மனைவி இருவரையும் குழந்தையுடன் சேலம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டை காலி செய்யும்படி மிரட்டல்
இதுகுறித்து அந்த தம்பதி கூறும் போது, எங்கள் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகில் எங்களுக்கு சொந்தமான வீட்டில், முன் பகுதியில் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறோம். நாங்கள் வசித்து வரும் வீடு கோவில் நிலத்திற்கு சொந்தமானது என்றும், வீட்டை காலி செய்யும்படியும் சிலர் மிரட்டுகின்றனர் என்றனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு எங்களை வெளியேற்றி, வீட்டை பூட்டி விட்டனர். இதனால் குடியிருக்க வீடு இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். எனவே வீட்டை காலி செய்ய வலியுறுத்தி மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நாங்கள் வசிக்கும் வீட்டிற்கு பட்டா வழங்க வேண்டும் என்றனர்.
பரபரப்பு
சேலம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த ஆய்வுக்கூட்டத்துக்கு அமைச்சர் கே.என்.நேரு நேற்று வந்து இருந்தார். அவரது கார் நிறுத்தப்பட்டு இருந்த பகுதியில் இந்த தம்பதி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.