மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தொழிலாளி பலி

உத்தமபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.

Update: 2022-11-02 17:05 GMT

தேனி மாவட்டம் கம்பம் நாட்டுக்கல் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 44). கூலித்தொழிலாளி. இவரது நண்பர் அனுமந்தன்பட்டியை சேர்ந்த மணி (42). இவர்கள் 2 பேரும் நேற்று இரவு கம்பத்தில் இருந்து அனுமந்தன்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை கணேசன் ஓட்டி சென்றார்.

உத்தமபாளையம்-கம்பம் சாலையில் அனுமந்தன்பட்டி அருகே அவர்கள் வந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கணேசன், மணி ஆகியோர் தூக்கிவீசப்பட்டனர். கணேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். மணி படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்த மணியை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்