விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

அம்மையநாயக்கனூரில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-12-16 16:27 GMT

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பஸ் நிறுத்தம் அருகில் விஷம் குடித்த நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த நபர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த ராமநாயக்கன்பட்டியை சேர்ந்த மணிவேல்முருகன் (வயது 37) என்பது தெரியவந்தது. கூலித்தொழிலாளி அவருக்கு, திருமணமாகி செல்லம்மாள் என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். மணிவேல்முருகன், சின்னாளப்பட்டியை அடுத்த செட்டியபட்டியில் உள்ள தனது அக்காள் வீட்டில் வசித்து வந்தார். அங்கிருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார். இதற்கிடையே மனைவி பிரிந்து சென்றதால் மனஉளைச்சலில் இருந்து வந்த மணிவேல்முருகன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு அம்மையநாயக்கனூர் வந்த அவர், விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்