மகனை கடித்த பாம்புடன் வந்த தொழிலாளி
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு மகனை கடித்த பாம்புடன் தொழிலாளி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று காலை ஒருவர், தனது மகனுடன் வந்தார். தனது மகனை பாம்பு கடித்து விட்டதாகவும், அதற்கு உரிய சிகிச்சை அளிக்கும்படியும் கூறினார். மேலும் மகனை கடித்த நல்ல பாம்பை கொண்டு வந்துள்ளதாக கூறி பையை திறந்து காண்பித்தார். அதற்குள் சுமார் 4 அடி நீளத்தில் இருந்த அந்த நல்ல பாம்பை பார்த்ததும் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து சிறுவனை உடனடியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க தொடங்கினர். இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், பாம்புடன் வந்தவர் பழைய கன்னிவாடியை அடுத்த கே.குரும்பபட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி செல்வம் என்பது தெரியவந்தது. இவருடைய மகன் தர்மராஜ் (வயது 8). அந்த பகுதியில் இருக்கும் பள்ளியில் தர்மராஜ் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்த நிலையில் நேற்று அவன் பள்ளிக்கு புறப்பட்டு கொண்டிருந்தான். அப்போது வீட்டுக்குள் புகுந்த நல்லபாம்பு அவனை கடித்து விட்டது. இதனால் அவன் வலியால் அலறி துடித்தான். சத்தம் கேட்டு ஓடிவந்த செல்வம் பாம்பை அடித்துள்ளர். பின்னர் மகனை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை அழைத்து வந்த போது, டாக்டரிடம் காண்பிக்க பாம்பை பையில் போட்டு எடுத்து வந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.