வெள்ளகோவில்
வெள்ளகோவில் அருகே கணவர் ஓட்டி சென்ற ஸ்கூட்டர் டயர் வெடித்து பின்னால் அமர்ந்திருந்த மனைவி கீழே விழுந்து சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஸ்கூட்டர் டயர் வெடித்தது
திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்தவர் முருகன் (வயது45). இவரும் இவரது மனைவி தீபா (35) மற்றும் தர்ஷன் (14), கிரிதரன் (10) ஆகிய 2 மகன்களுடன் திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், தெக்கலூர் ஏரிப்பாளையத்தில் குடியிருந்து கொண்டு முருகன் சூலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராகவும், தீபா அவினாசியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்திலும் வேலை செய்து வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் சொந்த ஊரான திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்வதாக முடிவு செய்தனர். நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில் ஸ்கூட்டரில் முருகன் மற்றும் இவரது மனைவி தீபா மகன்கள் இருவரும் தெக்கலூரில் இருந்து புறப்பட்டு கோவை - திருச்சி சாலையில் ஓலப்பாளையம் அருகே வரும்போது, முருகன் ஓட்டி வந்த ஸ்கூட்டரின் பின் சக்கரம் திடீரென வெடித்தது. இதனால் பின்னால் அமர்ந்திருந்த தீபா நிலை தடுமாறி கீழே விழுந்து பின் தலையில் பலத்த அடிபட்டது.
பெண் பலி
உடனே அந்த வழியாக வந்தவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தீபாவை காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த தீபா சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து விட்டார்.
இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,
இந்த விபத்தில் சிறுவன் கிரிதரனுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. முருகன் மற்றும் அவரது மகன் தர்ஷன் ஆகியோர் காயமின்றி தப்பினர்.
=============