கார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்
கோவை ஆர்.எஸ்.புரத்தில் சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் மீது கார் மோதியது. இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் மீது கார் மோதியது. இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பெண் மீது கார் மோதல்
வடகோவை சிந்தாமணியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வேல்முருகன். இவருடைய மனைவி லீலாவதி (வயது 32). இவர் அந்த பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று லீலாவதி, வழக்கம்போல் வேலைக்காக தனது வீட்டில் இருந்து பூ மார்க்கெட் வழியாக சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
ஆர்.எஸ்.புரம் கென்னடி தியேட்டர் அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு, லீலாவதி மீது மோதியது. இதில் அவர் சுமார் 50 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டார்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்து, ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணை
இதற்கிடையில் விபத்து நடந்து இடத்தில் இருந்து தப்பியோட முயன்ற கார் டிரைவரை பொதுமக்கள் பிடித்து விசாரித்தனர். சம்பவம் குறித்து அறிந்து வெரைட்டிஹால் போக்குவரத்து புலனாய்வு போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து போலீசார், கார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் வடமாநிலத்தை சேர்ந்த உத்தம்குமார் என்பதும், கோவையில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது.
உத்தம்குமார் அஜாக்கிரதையாக அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ வைரல்
இந்த நிலையில் லீலாவதி மீது கார் மோதி, அவர் தூக்கி வீசப்பட்ட காட்சி அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த காட்சி கோவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.