வாய்க்காலில் தூா் வாரும் பணியில் ஈடுபட்ட பெண் திடீர் சாவு
வாய்க்காலில் தூா் வாரும் பணியில் ஈடுபட்ட பெண் திடீரென இறந்தார்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தில் நேற்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நாகல் ஏரி வரத்து வாய்க்காலை தூர் வாரும் பணிகள், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நடைபெற்று நடைபெற்றது. இந்த பணியில் 147 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதில் கோடங்குடி நடுத்தெருவை சேர்ந்த கலியமூர்த்தியின் மனைவி வாசுகி (50) என்பவரும் அங்கு வேலை செய்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மயக்கம் தெளிவிக்க முயன்றபோது, அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்து அவரது மகள் மகேஸ்வரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிவு செய்து, வாசுகியின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.