மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் கணவர் இறந்த மறுநாளில் விபரீத முடிவு
கணவர் இறந்த மறுநாளில் விபரீத முடிவு
கோபி அருகே கணவர் இறந்த மறுநாளில் மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு பெண் தற்கொலைக்கு முயன்ற விபரீத சம்பவம் நடந்துள்ளது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கடன் தொல்லையால் அவதி
கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 56). இவர் அங்கு உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவருடைய மனைவி பத்மாவதி (40). இவர்களுடைய மகன் ஹரிகுக விக்னேஷ் (12). இவர் கோபியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நடந்த விபத்து காரணமாக லோகநாதன் வேலையை இழக்க நேரிட்டது. இதனால் வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்த சிரமப்பட்டார். கடன் வாங்கி சமாளித்து வந்தார். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் கொடுத்த கடனை திருப்பி தருமாறு லோகநாதனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். ஆனால் வேலையில்லாததால் அவரால் கடனை செலுத்த முடியவில்லை. கடன் தொல்லையால் அவதிப்பட்டு் வந்துள்ளார்.
தற்கொலை
இதனால் லோகநாதன் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஹரிகுக விக்னேசை டியூசனுக்கு அனுப்பிவிட்டு கோபி வாய்க்கால் ரோட்டில் உள்ள நகராட்சி பூங்கா அருகே சென்றார். பின்னர் அங்கு தான் வாங்கி வைத்திருந்த விஷத்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.
அக்கம்பக்கத்தினர் உடனே அவரை மீட்டு் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அதைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி லோகநாதன் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
மனைவியும் விஷம் குடித்தார்
இதனால் பத்மாவதி மனவேதனை அடைந்தார். கணவர் இறந்ததால் மனமுடைந்து காணப்பட்டு வந்த அவர் தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தானும் இறந்தால் தன்னுடைய மகன் நிலைமை என்னவாகும் என்று வருந்தினார். இதனால் மகனை கொன்றுவிட்டு் தானும் தற்கொலை செய்துகொள்ள எண்ணினார். இந்தநிலையில் நேற்று காலை ஹரிகுக விக்னேசுக்கு விஷத்தை கொடுத்து குடிக்க வைத்தார். அதன்பின்னர் பத்மாவதியும் விஷத்தை குடித்தார். இதில் 2 பேரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதுபற்றி அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு் வருகிறது.
இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவர் இறந்த மறுநாளில் மகனுடன் விஷம் குடித்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.