செஞ்சி அருகேஅமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்பு சாமியாடிய பெண்சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகிறது

செஞ்சி அருகே அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்பு பெண் சாமியாடினாா். இது தொடா்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

Update: 2023-07-01 18:45 GMT

செஞ்சி, 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆர்.நயம்பாடி பகுதியில் சாலை அமைக்கும் பணிக்காக பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு, பூமி பூஜை போட்டு புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இதற்கிடையே அங்கு வந்திருந்த பெண் ஒருவர், திடீரென சாமி ஆடினார். இதை பார்த்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், அந்த பெண்ணிடம் என்ன என்று கேட்டார். அப்போது அவர், தான் கன்னிமார் சாமி என்றும், அந்த கோவில் அமைந்துள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ரோடு போட்டு தர வேண்டும் என்றும் சாமி ஆடியபடியே அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.

தொடா்ந்து சாமி ஆடிய அந்த பெண்ணுக்கும், அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு இடையே உரையாடல் ஒன்று நிகழ்ந்தது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

அமைச்சர் செஞ்சி மஸ்தான்:-

ரோடு போட்டு கொடுக்கிறேன், அதற்கான வழிவிடமாட்டேன் என்று சொல்கிறவர்கள் மனதில் போய், நீ வழிவிடுவதற்கு சொல், ரோடு போட்டுத்தருகிறேன்.

சாமி ஆடிய பெண்:- நீ தான் முடிவு செய்ய வேண்டும்.

அமைச்சர்:- நான் முடிவு செய்கிறேன், நீ கூடவே இரு. நீ ஊரை பாதுகாத்துக்கோ என்று கூறி, அந்த பெண்ணுக்கு லட்டு ஒன்றை கொடுத்தார்.

மேலும், கன்னிமார் சாமிக்கு நானும் பாட்டுப்பாடி, கரகம் தூக்கி கூழ் ஊற்றவும் செய்து இருக்கிறேன். அதனால் தான், எனது சொந்த இடத்தை மலைவாழ் மக்களுக்காக கொடுத்தேன். அவர்களும் அங்குள்ள சாமியை குலதெய்வமாக வணங்கி வருகிறார்கள் என்று கூறி அந்த பெண்ணை அமைதியடைய செய்தார்.

சாமி ஆடிய பெண்:- சரி நீ எனது கோரிக்கையை செய்து கொடுத்துவிடு.

அமைச்சர்:- 100 சதவீதம் செய்து தருகிறேன், நீ கூடவே இரு, அதற்காக தான் இனிப்பு கொடுத்துள்ளேன்.

இவ்வாறாக அந்த உரையாடல் இருந்தது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்