மொபட்டில் சென்ற பெண்ணை கீழே தள்ளி 25 பவுன் நகை பறிப்பு
மொபட்டில் சென்ற பெண்ணை கீழே தள்ளி 25 பவுன் நகையை பறித்து சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சோழவந்தான்
மொபட்டில் சென்ற பெண்ணை கீழே தள்ளி 25 பவுன் நகையை பறித்து சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நகை பறிப்பு
சோழவந்தானை சேர்ந்தவர் ரீகன். இவரது மனைவி காயத்ரி என்ற சோபியா (வயது 33) இவர் முன்னாள் துணை போலீஸ் சூப்பிரண்டு சுருளியாண்டி மகள். இந்தநிலையில் காயத்ரி தனது மொபட்டில் நேற்று ராயபுரத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் தனது மகனை விட்டுவிட்டு சோழவந்தனை நோக்கி சென்று கொண்டிருந்தார். திருமால்நத்தம் அருகில் வரும்போது, இவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர்.
இவர்கள் திடீரென காயத்ரி மொபட்டை காலால் மிதித்து கீழே தள்ளினார். இதில் காயத்ரி நிலை தடுமாறி அருகில் உள்ள முள்செடியின் மீது விழுந்தார். இதையடுத்து அவர் அணிந்திருந்த சுமார் 25 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பினர்.
கண்காணிப்பு கேமரா
இதுகுறித்து சோழவந்தான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் மற்றும் போலீசார் நகையை பறித்து சென்ற மோட்டார் சைக்கிள் திருடர்களை வலைவீசி தேடிவருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் முகத்தை துணியால் மூடியபடி 3 பேர் செல்வது பதிவாகி இருந்தது. இவர்கள் நகையை பறித்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.