மேட்டூர்:-
ஜலகண்டாபுரம் அருகே உள்ள கரிக்காபட்டி கிராமம் தோரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வடிவேலு, விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி துர்கா (வயது 23). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 வயதில் ஜனார்த்தனன் என்ற மகன் உள்ளான். துர்காவின் அத்தை பூங்கொடி என்பவர் கொளத்தூர் அருகே உள்ள பூமனூர் கிராமம் கருங்கரடு பகுதியில் உள்ள பழனியப்பன் என்பவருடைய விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி துர்கா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கருங்கரடு பகுதியில் உள்ள தனது அத்தை பூங்கொடியின் வீட்டிற்கு வந்தார். நேற்று காலை துர்காவை திடீரென காணவில்லை. இதனால் அவர் கிணற்றில் குதித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு துர்காவின் குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.
மேட்டூர் தீயணைப்பு படை வீரர்கள் நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் அங்கு வந்து கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது தண்ணீரில் மூழ்கி இறந்து போன துர்காவின் உடலை அவர்கள் மீட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த கொளத்தூர் போலீசார், துர்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் துர்கா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.