கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

பொள்ளாச்சி அருகே மகன் மோட்டார் சைக்கிள் கேட்டு தொந்தரவு செய்ததால் விரக்தியில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டாார்.

Update: 2022-11-02 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே மகன் மோட்டார் சைக்கிள் கேட்டு தொந்தரவு செய்ததால் விரக்தியில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டாார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மோட்டார் சைக்கிள் கேட்டு தகராறு

பொள்ளாச்சி மோதிராபுரம் இளங்கோ வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், எலெக்ட்ரீசியன். இவருடைய மனைவி மணிமேகலை (வயது 36). தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சஞ்சய் குமார் (18) என்ற மகன் உள்ளார். இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ முதலாமாண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் சஞ்சய்குமார் கல்லூரிக்கு சென்று வருவதற்கு புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி தரும்படி பெற்றோரிடம் கேட்டு வந்தார். ஆனால் பெற்றோர் மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு சஞ்சய்குமார் மீண்டும் பெற்றோரிடம் மோட்டார் சைக்கிள் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு மணிமேகலை பிறகு வாங்கி தருவதாக கூறினார். ஆனால் சஞ்சய்குமார் மோட்டார் சைக்கிள் வேண்டும் என்று தொடர்ந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற மணிமேகலை வீடு திரும்பவில்லை. இதையடுத்து ரவிச்சந்திரன் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில் மோதிராபுரம் பகுதியில் கிணற்றில் பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக நகர கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்றனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இருந்து உடலை மீட்டனர்.

இதில் இறந்தது மணிமேகலை என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரை நடத்தினர். இதில் மணிமேகலை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் மோட்டார் சைக்கிள் கேட்டு தகராறில் ஈடுபட்டதால் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்