சேலையில் தீப்பிடித்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு
ஆலங்குடி அருகே சேலையில் தீப்பிடித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கணவன்-மனைவி படுகாயம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மேலக்கோட்டை தெற்கு பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 37). இவரது மனைவி பேச்சி (35). இவர் சம்பவத்தன்று வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அடுப்பில் மண்எண்ணெய் எடுத்து ஊற்றிய போது, எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவியது. இதையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு, வெள்ளைச்சாமி, பேச்சியை காப்பாற்ற முயன்றார். அப்போது வெள்ளைச்சாமி மீதும் தீப்பிடித்தது. இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர்.
பெண் சாவு
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீக்காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பேச்சி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். வெள்ளைச்சாமி சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.