கணவருக்கு பரோல் வழங்கக்கோரி ஸ்ட்ரெச்சரில் வந்து மனு அளித்த பெண்

சிறையில் இருக்கும் கணவருக்கு பரோல் வழங்கக்கோரி ஸ்ட்ரெச்சரில் வந்து பெண் ஒருவர் மனு அளித்தார்.

Update: 2023-06-26 21:15 GMT

கோவை

சிறையில் இருக்கும் கணவருக்கு பரோல் வழங்கக்கோரி ஸ்ட்ரெச்சரில் வந்து பெண் ஒருவர் மனு அளித்தார்.

குறைதீர்க்கும் கூட்டம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கிராந்தி குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் கோவை கரும்புகடையை சேர்ந்த பாத்திமா ஸ்ட்ரெச்சரில் படுத்தப்படி வந்து மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

எனது கணவர் சுலைமான் பெங்களூரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அவரை இதுவரை வெளியே விடவில்லை. மேலும் வழக்கை நடத்தாமல் கிடப்பில் போட்டு உள்ளனர். நான் தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். எனவே எனது கணவருக்கு பரோல் வழங்க வேண்டும் அல்லது ஜாமீனில் வெளியே விட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

பெட்ரோல் கேனுடன் வந்த பெண்

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு பெண் ஒருவர் கையில் பெட்ரோல் கேனுடன் வந்தார். இதனை கண்ட போலீசார் அவரது கையில் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீஸ் விசாரணையில் அந்த பெண் கோவை அருகே உள்ள கணுவாயை சேர்ந்த சைலஜா (வயது 35) என்பது தெரியவந்தது. பின்னர் சைலஜா போலீசாரிடம் கூறியதாவது:-

நானும் எனது கணவரும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறோம். கொரோனா காலகட்டத்தில் டிராவல்ஸ் தொழில் நஷ்டம் ஏற்பட்டு வருமானம் இல்லாமல் இருந்தோம். இந்த நிலையில் வடவள்ளி பகுதியை சேர்ந்த 2 பேர் எனக்கு எனக்கு அறிமுகமானார்கள். அவர்கள் இருவரும் பணம் கொடுத்தால் டாஸ்மாக் பார் ஏலம் எடுத்து தருவதாக கூறினர். இதனை உண்மை என நம்பிய நான் எனது வீட்டை அடமானம் வைத்து அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.13.40 லட்சமும், நேரடியாக ரூ.5 லட்சமும் கொடுத்தேன். ஆனால் பணத்தைக் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் அவர்கள் டாஸ்மாக் பாரை ஏலம் எடுத்து தரவில்லை. இந்த நிலையில் எனது வீடு மற்றும் வாகனங்கள் ஜப்தி நிலைக்கு வந்தது இதனை அடுத்து நான் அவர்களை சந்தித்து பணத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்டேன். ஆனால் ரூ.3 லட்சம் பணத்தை மட்டும் கொடுத்தனர். ரூ.2 லட்சம் பணத்தை தர மறுத்து என்னை மிரட்டுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து கலெக்டரிடம் புகார் மனு அளிக்கும்படி போலீசார் அந்த பெண்ணிடம் கூறினர். இதையடுத்து அந்த பெண் அங்கிருந்து சென்றார்.

அனுமதியின்றி குழாய்கள் பதிப்பு

ராஷ்ட்ரிய இந்து மகாசபா தலைவர் வேலுசாமி, இந்து மக்கள் புரட்சி படை நிறுவன தலைவர் பீமா பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டும், கையில் குழாய் பிடித்தப்படியும் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- காரமடை ஒன்றியம் ஆலங்கொம்பு பகுதியில் பவானி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தனிநபர் தனது தோட்டத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக அரசு நிலத்தில் குழாய்கள் பதித்து உள்ளார். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இருந்தது.

விஷ்வ இந்து பரிசத் அமைப்பினர் அளித்த மனுவில், பக்ரீத் பண்டிகை அன்று பொது இடங்களில் மாடுகள் வதை செய்யப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று இருந்தது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அளித்த மனுவில், காந்திபுரம் பகுதியில் வாகன போக்குவரத்து மாற்று ஏற்பாட்டால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிலில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனை கைவிட்டு மீண்டும் பழைய முறைப்படி வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

கோவை கணபதி கக்கன்வீதியை சேர்ந்த ரங்கநாதன் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் சூயஸ் குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே குழிகளை சீரமைத்து சாலை அமைக்க வேண்டும் என்று இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்