கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் நடைபாதை கடைகளை சூறையாடிய காட்டு யானை - கன்று குட்டியையும் மிதித்து கொன்றது

கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் நடைபாதை கடைகளை காட்டு யானை சூறையாடியது. மேலும் கன்று குட்டியையும் மிதித்து கொன்றது.

Update: 2022-11-17 18:45 GMT

வால்பாறை

கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் நடைபாதை கடைகளை காட்டு யானை சூறையாடியது. மேலும் கன்று குட்டியையும் மிதித்து கொன்றது.

கூழாங்கல் ஆறு

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ரேஷன் கடை, கோவில், சத்துணவு மையம், தொழிலாளர்கள் வீடுகளை யானைகள் சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வால்பாறை பகுதியின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் கூழாங்கல் ஆறு, நல்லகாத்து எஸ்டேட், சிறுகுன்றா எஸ்டேட் ஆகிய பகுதிகளில் கடந்த 2 வாரமாக காட்டு யானைகள் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகிறது.

சில சமயத்தில் கூழாங்கல் ஆற்றில் இறங்கி கடந்து சென்றுள்ளது. தற்போது கூழாங்கல் ஆற்று பகுதிக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் வால்பாறை பகுதியைச் சேர்ந்த சில நடைபாதை வியாபாரிகள் சிறிய வாகனங்களில் தள்ளு வண்டிகளை அமைத்து சுற்றுலா பயணிகளுக்கு தேவையான காபி, டீ, திண்பண்டங்கள், பல்வேறு வகையான சிற்றுண்டிகளை தயார் செய்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

நடைபாதை கடைகள் சேதம்

இந்த நிலையில் யானைகள் கூட்டத்தை சேர்ந்த காட்டு யானை ஒன்று நேற்று முன்தினம் நள்ளிரவு கூழாங்கல் ஆற்று பகுதிக்கு வந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நடைபாதை வியாபாரிகளின் கடைகளை தந்தங்களால் குத்தி சேதப்படுத்தியது. இதில் ஹரிகிருஷ்ணன் என்பவரின் கடையை உடைத்து பொருட்களை சேதப்படுத்தி கடையையும் உருட்டி விட்டுள்ளது. கடைக்கு அருகில் படுத்திருந்த கண்ணன் என்பவரின் கன்று குட்டியையும் தாக்கியதோடு, மிதித்தது. இதில் கன்று குட்டி சம்பவயிடத்திலேயே பரிதாபமாக இறந்து போனது.

இதுபற்றி அறிந்ததும் சம்பவஇடத்திற்கு வந்த வால்பாறை வனத்துறையினர் காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். வால்பாறை கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

கண்காணிப்பு மையம்

காட்டு யானை கூழாங்கல் சுற்றுலா தலத்தில் உள்ள கடைகளை உடைக்க தொடங்கியதால் இனிவரும் நாட்களில் கூழாங்கல் ஆற்று பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். கூழாங்கல் ஆற்று பகுதிக்கு செல்வதற்கு நேரம் ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும். மேலும் போலீசார் மற்றும் வனத்துறையின் கண்காணிப்பு மையம் அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்