பலாப்பழங்களை பறிக்க போராடிய காட்டுயானை
கோத்தகிரி அருகே மரத்தில் தொங்கிய பலாப்பழங்களை பறிக்க காட்டுயானை போராடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே மரத்தில் தொங்கிய பலாப்பழங்களை பறிக்க காட்டுயானை போராடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
பலாப்பழ சீசன்
கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பலா மரங்களில் தற்போது சீசன் காரணமாக பலா பழங்கள் பழுத்து குலுங்கி வருகின்றன. இவற்றை தின்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து ஆண்டுதோறும் காட்டுயானைகள் இப்பகுதிக்கு வந்து முகாமிட்டு, சீசன் முடிந்தவுடன் திரும்பிச்செல்வது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு பலாப்பழங்களை தின்பதற்காக வந்த காட்டு யானைகள் வழக்கம் போல் சமவெளி பகுதிக்கு திரும்பிச் செல்லாமல் இதே பகுதியில் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன. இவ்வாறு முகாமிட்டுள்ள காட்டு யானைகள் சாலையோரங்களில் உள்ள பலா மரங்களில் உள்ள பழங்களை தின்பதற்காக கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அடிக்கடி உலா வருவதுடன், அவ்வழியாக செல்லும் வாகனங்களையும் சேதப்படுத்தி வருகின்றன.
மரத்தை உலுக்கியது
இந்தநிலையில் நேற்று முள்ளூர் கிராம பகுதியில் ஆண் யானை ஒன்று அங்குள்ள பலா மரத்தில் பழுத்திருந்த பழங்களை தனது துதிக்கையை உயர்த்தி பறிக்க முயற்சி செய்தது. ஆனால் அது முடியவில்லை. பின்னர் முன்னங்கால்களை மரத்தின் மீது தூக்கி வைத்தவாறு முயற்சித்தது. ஆனால் அப்போதும் பழங்களை பறிக்க முடியாததால், அதன் போராட்டம் வீணானது. எனினும் தளராமல் தனது தோள்களால் மரத்தை இடித்து உலுக்கி பழங்களை கீழே விழச்செய்து ருசித்துவிட்டு சென்றது. இந்த காட்சியை அங்கிருந்த இளைஞர்கள் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தொல்லை அளிக்கக்கூடாது
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-பலா பழ சீசன் காரணமாக குஞ்சப்பனை, மாமரம், முள்ளூர், கீழ்த்தட்டப்பள்ளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், ,கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோரங்களிலும் காட்டு யானைகள் தொடர்ந்து உலா வருகின்றன. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை கவனமாக இயக்குவதுடன், யானைகளை கண்டால் அவற்றிற்கு தொல்லை அளிக்க கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.