குட்டியுடன் உலா வரும் காட்டுயானை

கெத்தை மலைப்பாதையில் குட்டியுடன் காட்டுயானை உலா வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு, வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-06-22 19:30 GMT

மஞ்சூர்

கெத்தை மலைப்பாதையில் குட்டியுடன் காட்டுயானை உலா வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு, வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கெத்தை மலைப்பாதை

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை மாவட்டம் காரமடைக்கு செல்லும் கெத்தை மலைப்பாதை பெரும்பாலும் அடர்ந்த வனப்பகுதியை கொண்டதாக உள்ளது. இதனால் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் சுற்றித்திரிகின்றன. இதையொட்டி மாலை 6 மணிக்கு பிறகு வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் உள்ளூர் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இதற்கிடையில் கடந்த 2 மாதங்களாக கெத்தை மலைப்பாதையில் 6 யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது சாலையில் முகாமிடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

குட்டியுடன் காட்டுயானை

இந்த நிலையில் கெத்தை மலைப்பாதையில் கடந்த 2 நாட்களாக யானை கூட்டத்தில் இருந்து பிரிந்து குட்டியுடன் தாய் யானை சுற்றித்திரிகிறது. வழக்கமாக குட்டியுடன் உலா வரும் காட்டுயானைகள் வாகனங்களின் அருகில் வந்தால் தாக்க முயற்சி செய்யும். ஆனால் இந்த யானைகள் எதுவும் செய்யாமல் அமைதியாக உலா வருகின்றன. சில நேரங்களில் குட்டி யானை கிளைகளை சாலையில் இழுத்து போட்டு சேட்டையில் ஈடுபடுகிறது. இதை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையே யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கவனமுடனும், அதே சமயம் யானைகளுக்கு இடையூறு செய்யாமலும் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்