சாலையில் உலா வந்த காட்டு யானை
காரமடை அருகே சாலையில் உலா வந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
காரமடை
காரமடை அருகே வெள்ளியங்காடு, பில்லூர் அணை, அத்திக்கடவு பகுதிகள் உள்ளன. இப்பகுதி தமிழக-கேரள எல்லையில் உள்ள வனப்பகுதி ஆகும். கோவை மாவட்டத்தில் இருந்து வெள்ளியங்காடு, முள்ளி வழியாக நீலகிரிக்கு 3-வது மாற்றுப்பாதை செல்கிறது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனையொட்டி இந்த வழியாக சுற்றுலா பயணிகள் வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்தநிலையில் அத்திக்கடவு பாலம் பகுதிக்கு ஆண் காட்டு யானை தண்ணீர் குடிக்க வந்தது. அங்கு கோவை-மஞ்சூர் சாலையில் உலா வந்தது. பின்னர் யானை சாலையில் நின்றபடி, துதிக்கையால் மரத்தின் கிளைகளை உடைத்து இலைகளை தின்றது. இதை பார்த்த சிலர் செல்போனில் புகைப்படம் எடுத்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு யானை வனப்பகுதிக்குள் சென்றது. காட்டு யானை நடமாடி வருவதால், வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.