அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானை
கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ்சை காட்டு யானை வழிமறித்தது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
கூடலூர்
கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ்சை காட்டு யானை வழிமறித்தது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
யானை வழிமறித்தது
கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து ஊருக்குள் புகுந்து வருகிறது. கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஊசிமலை காட்சி முனை, தெய்வமலை, 27-வது மைல், சில்வர் கிளவுட் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது.
இந்தநிலையில் கூடலூரில் இருந்து நேற்று மாலை 4.30 மணிக்கு ஊட்டிக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அப்போது 27-வது மைல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அப்பகுதியில் மறைந்து இருந்த காட்டு யானை திடீரென சாலையின் குறுக்கே வந்தது. தொடர்ந்து அரசு பஸ்சை வழிமறித்த படி நடுரோட்டில் நின்றது. இதை கண்ட பயணிகள் அச்சமடைந்தனர்.
பயணிகள் பீதி
அந்த சமயத்தில் காட்டு யானை அரசு பஸ்சை நோக்கியவாறு சாலையில் வேகமாக நடந்து வந்தது. இதனால் டிரைவர் பஸ்சை பின்னோக்கி இயக்கினார். அப்போது காட்டு யானை பஸ்சை நோக்கி வருவதை கண்ட பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். தொடர்ந்து வேகமாக வந்த காட்டு யானை பஸ்சின் முன்னால் வந்து நின்றவாறு பிளிறியது.
இதனால் யானை பஸ்சை தாக்கி விடும் என அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால், காட்டு யானை பஸ்சின் இடதுபுறமாக சென்றவாறு வழிவிட்டது. இதனால் பயணிகள் பயத்தில் மீண்டும் சத்தம் போட்டனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக காட்டு யானை ஒதுங்கி சென்றது. அதன் டிரைவர் பஸ்சை வேகமாக ஓட்டி ஊட்டியை நோக்கி புறப்பட்டார். அதன் பின்னரே பயணிகள் நிம்மதி அடைந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.