ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டுயானை
மசினகுடியில் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை காட்டுயானை சேதப்படுத்தியது. மேலும் வீடுகளை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
கூடலூர்
மசினகுடியில் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை காட்டுயானை சேதப்படுத்தியது. மேலும் வீடுகளை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
தென்னை மரங்களை சாய்த்தது
கூடலூர், மசினகுடி வனப்பகுதியில் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தீவனம், குடிநீரை தேடி ஊருக்குள் வருகிறது.
இந்த நிலையில் மசினகுடியில் நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்தது. தொடர்ந்து மசினகுடி-தெப்பக்காடு சாலையை கடந்து பொதுமக்கள் வீடுகளை முற்றுகையிட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இந்த சமயத்தில் அப்பகுதியில் பயிரிட்டு பராமரித்து வரும் தென்னை மரங்களை காட்டுயானை வேருடன் சரித்து போட்டது. மேலும் பப்பாளி உள்ளிட்ட விவசாய பயிர்களை மிதித்து நாசம் செய்தது. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். நேற்று விடியற்காலை வரை அப்பகுதியில் காட்டு யானை முகாமிட்டிருந்தது.
தடுக்க வேண்டும்
அதன்பிறகு முதுமலை வனத்துக்குள் சென்றது. இதுபோல் காட்டுயானை ஊருக்குள் அடிக்கடி வருவதால் விவசாய பயிர்களை சேதமாவதுடன், இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கடந்த சில வாரங்களாக காட்டு யானை தொடர்ந்து ஊருக்குள் வருகிறது. தற்போது பிரதமர் மோடி முதுமலைக்கு வர உள்ளதால் போலீசார் மற்றும் வனத்துறையினர் உள்பட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் இப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். இருப்பினும் இரவில் காட்டு யானை ஊருக்குள் வருகிறது. எனவே காட்டு யானை வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.