சோலார் மின்வேலியை சேதப்படுத்திய காட்டு யானை
ஆயக்குடி அருகே சோலார் மின்வேலியை காட்டு யானை சேதப்படுத்தியது.
பழனியை அடுத்த ஆயக்குடி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் சட்டப்பாறை, கோம்பைப்பட்டி, வரதாப்பட்டினம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள தோட்டங்களில் கரும்பு, தென்னை, கொய்யா, மா விவசாயம் அதிகமாக நடைபெற்று வருகிறது. மேலும் மக்காச்சோளம், பருத்தி, பயறு வகைகளையும் விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சட்டப்பாறை, கோம்பைப்பட்டி பகுதிகளில் காட்டுயானைகள் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்து வருகிறது. அதன்படி நேற்று கோம்பைப்பட்டியை சேர்ந்த செந்திலரசு என்பவரின் தோட்டத்தில் சோலார் மின்வேலியை சேதப்படுத்தி புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கு பயிரிட்டு இருந்த கரும்பு, மக்காச்சோளம் பயிர்களை தின்று நாசம் செய்தது. காலையில் தோட்டத்துக்கு சென்ற அவர், வேலி, பயிர்கள் சேதமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டனர். தொடர்ந்து யானை நடமாட்டத்தை கண்காணித்து, அதை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தோட்டங்களில் புகுந்து ஒற்றை காட்டுயானை அட்டகாசம் செய்து வருவதால் ஆயக்குடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.