அரசு பள்ளியை சேதப்படுத்திய காட்டுயானை

ஓவேலியில் அரசு பள்ளியை காட்டுயானை சேதப்படுத்தியது.

Update: 2023-02-08 18:45 GMT

கூடலூர்

ஓவேலியில் அரசு பள்ளியை காட்டுயானை சேதப்படுத்தியது.

கதவு, ஜன்னல் சேதம்

கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சி நியூஹோப் பகுதியில் தனியார் எஸ்டேட்டுக்கு சொந்தமான நிலத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தோட்ட தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அரசு தொடக்கப்பள்ளியை காட்டுயானை ஒன்று முற்றுகையிட்டது. அதிகாலை 2 மணியளவில் பள்ளி ஜன்னல், கதவுகளை உடைத்து சேதப்படுத்தியது. மேலும் அங்கிருந்த பொருட்களை சூறையாடியது. சத்தம் கேட்ட தனியார் எஸ்டேட் காவலாளிகள், தோட்ட தொழிலாளர் குடும்பத்தினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ஓவேலி வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் அச்சம்

இதையடுத்து நேற்று காலையில் வழக்கம் போல் பள்ளிக்கூடத்துக்கு வந்த ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளியை காட்டு யானை சேதப்படுத்தி இருப்பதை கண்டு அச்சமடைந்தனர். இதுகுறித்து பெற்றோர் கூறும்போது, பள்ளிகளில் உள்ள அரிசி, பருப்புகளை தின்பதற்காக காட்டுயானைகள் கட்டிடங்களை சேதப்படுத்தி வருகிறது. ஏற்கனவே பராமரிப்பு இன்றி இருக்கும் நிலையில் காட்டு யானைகளால் பள்ளி கட்டிடங்கள் தொடர்ந்து சேதமாகி வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்