வாகனங்களை துரத்திய காட்டு யானையால் பரபரப்பு
முதுமலையில் சாலையில் சென்ற வாகனங்களை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்,
முதுமலையில் சாலையில் சென்ற வாகனங்களை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டு யானை
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. தற்போது கோடை வறட்சியால் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் உணவு தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் காட்டு யானைகள் உள்ளன. தொடர்ந்து கூடலூர் மற்றும் மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை தொடர்ந்து முகாமிட்டு வருகிறது. மேலும் சுற்றுலா பயணிகளை வனப்பகுதிக்குள் சவாரிக்காக அழைத்துச் சென்ற வனத்துறை வாகனத்தின் முகப்பு கண்ணாடியை உடைத்தது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்களை தாக்க முயன்றது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் நின்றிருந்த லாரிக்குள் ஏறி உயிர் தப்பினர்.
வாகனங்களை துரத்தியது
இந்தநிலையில் நேற்று முன்தினம் தேசிய நெடுஞ்சாலையில் வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. இதில் சரக்கு லாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் சென்றது. அப்போது சாலையோரம் நின்றிருந்த காட்டு யானை திடீரென ஆவேசமடைந்து பிளிறியவாறு வாகனங்களை துரத்தியது.
இதை கண்ட டிரைவர்கள் தங்களது வாகனங்களை வேகமாக ஓட்டி சென்றனர். சிறிது தூரம் காட்டு யானை வாகனங்களை துரத்திய படி சென்றது. இதனால் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். பின்னர் காட்டு யானை சாலையோரம் சென்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் வாகனங்களை காட்டு யானை அடிக்கடி விரட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, வாகனங்களில் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.