தமிழக-கர்நாடக எல்லையில் முகாமிட்ட காட்டு யானை

கூடலூரில் தமிழக- கர்நாடகா எல்லையில் காட்டு யானை முகாமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காட்டு யானையை போலீசார், வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

Update: 2023-09-26 20:30 GMT

கூடலூர்

கூடலூரில் தமிழக- கர்நாடகா எல்லையில் காட்டு யானை முகாமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காட்டு யானையை போலீசார், வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

கண்காணிப்பு பணி

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் நேற்று கன்னட அமைப்பு சார்பில் முழு அடைப்பு நடந்தது. இதனால் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் கர்நாடகாவுக்குள் செல்ல போலீசார் தடை விதித்தனர்.

இதன் காரணமாக கூடலூர் தொரப்பள்ளியில் அனைத்து வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டதால் முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடியது.

இந்த நிலையில் கூடலூர்- கர்நாடக எல்லையான கக்கநல்லாநல்லாவில் நேற்று காலையில் வழக்கம்போல் போலீசார், வனத்துறையினர் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

காட்டு யானை முகாம்

அப்போது மாநில எல்லையில் காட்டு யானை முகாமிட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினரும், போலீசாரும் காட்டு யானையை விரட்ட முயன்றனர்.

ஆனால் அந்த யானை உடனடியாக அங்கிருந்து செல்ல வில்லை. பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு காட்டு யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே போலீசார், வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, தேசிய நெடுஞ்சாலைகள் வாகன போக்குவரத்து இல்லாததால் காட்டு யானை மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடி அருகே வந்துள்ளது. பின்னர் விரட்டியதால் வனத்துக்குள் சென்று விட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்