தொழிலாளி வீட்டை காட்டு யானை உடைத்தது
கூடலூரில் தொழிலாளி வீட்டை காட்டு யானைஉடைத்தது. கர்ப்பிணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கூடலூர்,
கூடலூரில் தொழிலாளி வீட்டை காட்டு யானைஉடைத்தது. கர்ப்பிணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
வீட்டை உடைத்தது
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஆனைசெத்தகொல்லி பகுதியில் நள்ளிரவு காட்டு யானைபுகுந்தது. பின்னர் பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டது. இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த புகழேந்திரன் என்பவரது வீட்டின் முன்பக்க சுவரை காட்டு யானை உடைத்து தள்ளியது.இதில் சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தது. இந்த சமயத்தில் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி புகழேந்திரன் மகளான கர்ப்பிணி நந்தினி என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மேலும் யானை வந்து இருப்பதை அறிந்து புகழேந்திரன் குடும்பத்தினர், மற்றொரு அறைக்குள் சென்று பதுங்கினர். இதனிடையே காட்டு யானை வீட்டின் கதவை உடைத்து விட்டு தும்பிக்கையை உள்ளே நுழைத்தது. தொடர்ந்து சமையலறையில் வைத்திருந்த அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை எடுத்து தின்றது. மேலும் கர்ப்பிணி நந்தினி சாப்பிடுவதற்காக வைத்திருந்த ஊட்டச்சத்து மாவு பாக்கெட்டுகளையும் காட்டு யானை ருசி பார்த்தது.
இழப்பீடு தொகை
தொடர்ந்து காட்டு யானையால் அச்சமடைந்த புகழேந்திரன் குடும்பத்தினர் சத்தம் போட்டனர். மேலும் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து காட்டு யானையை விரட்டியடித்தனர்.
தகவல் அறிந்த வனச்சரகர் ராஜேந்திரன், நகராட்சி துணைத் தலைவர் சிவராஜ், கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித், உதவியாளர் ரமேஷ் ஆகியோர் விரைந்து வந்து பாதிக்கப்பட்ட புகழேந்திரன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
அப்போது சேதமடைந்த வீட்டை சீரமைக்க இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என புகழேந்திரன் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ஊருக்குள் புகுந்த காட்டு யானையை கேரள வனத்துக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.