ரேஷன் கடையை உடைத்த காட்டு யானை

வால்பாறை எஸ்டேட் பகுதியில் ரேஷன் கடையை காட்டு யானை உடைத்தது. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.

Update: 2022-10-21 18:45 GMT

வால்பாறை, 

வால்பாறை எஸ்டேட் பகுதியில் ரேஷன் கடையை காட்டு யானை உடைத்தது. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.

ரேஷன் கடை சேதம்

வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் ரேஷன் கடைகளை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் இரவில் நிம்மதியாக உறங்க முடியாமல் தோட்ட தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வால்பாறை அருகே உள்ள காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு காட்டு யானை புகுந்தது.

அங்குள்ள ரேஷன் கடையை யானை உடைத்து சேதப்படுத்தியது. மேலும் காட்டு யனை தும்பிக்கையை உள்ளே நுழைத்து கடையில் வைக்கப்பட்டு இருந்த ரேஷன் அரிசியை தின்றது. சிறிது நேரத்துக்கு பின்னர் அங்கிருந்து யானை சென்றது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் மீண்டு ஒற்றை காட்டு யானை காஞ்சமலை எஸ்டேட் பகுதிக்குள் வந்து, ரேஷன் கடையை உடைத்தது. அங்கு ரேஷன் அரிசி இல்லாததால், சிதறி கிடந்த ரேஷன் அரிசியை இடிந்த சுவர் மண்ணுடன் சேர்த்து தின்றது.

தொழிலாளர்கள் அச்சம்

இதையடுத்து தொழிலாளர்கள் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். தொடர்ந்து 2-வது நாளாக ஒற்றை யானை காஞ்சமலை எஸ்டேட் ரேஷன் கடையை உடைத்ததால், தங்களது குடியிருப்பையும் உடைத்து விடுமோ என்ற அச்சத்தில் காஞ்சமலை எஸ்டேட் தொழிலாளர்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் வனத்துறை ஊழியர்களின் குடியிருப்புக்கு அருகில் தான் இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. எஸ்டேட் தொழிலாளர்களுடன் சேர்ந்து வனத்துறையினரும் விடிய, விடிய ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், யானை தொடர்ந்து காஞ்சமலை எஸ்டேட் பகுதிக்கு வந்து செல்கிறது. இந்தநிலையில் வனத்துறையினருடன் இணைந்து இயற்கை வன வள பாதுகாப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர் கணேஷ் ரகுராம் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு யானைகள் நடமாட்டம் குறித்தும், காட்டு யானைகளால் ஆபத்துகள் ஏற்படாமல் தடுப்பது குறித்தும் தொழிலாளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்